என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குழந்தை தொழிலாளர்"
தூத்துக்குடி மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மூலம் குழந்தைகள் மீட்கப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதன்படி மீட்கப்பட்டு தற்போது எஸ்.எஸ்.எல்.சி படித்து வரும் 25 மாணவ-மாணவிகளுக்கும், பிளஸ்-2 படித்து வரும் 25 மாணவ-மாணவிகளுக்கும் ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, எஸ்.எஸ்.எல்.சி மாணவ-மாணவிகளுக்கு அகராதியும், பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு கால்குலேட்டரும் வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் கூறியதாவது:-
ஒரு குடும்பத்தின் ஏழ்மை மற்றும் பல்வேறு காரணங்களால் சிறு வயதிலேயே குழந்தைகள் தொழிலுக்கு அனுப்பப்படுவதால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதில் இருந்து குழந்தைகளை மீட்டெடுத்து சிறப்பான கல்வி அளிக்க வேண்டும் என்பதற்காக, அரசு பல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், குழந்தை தொழிலாளராக இருந்து மீட்கப்பட்டு உயர்கல்வி கற்கும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசு திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 30 மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். குழந்தை தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து அரசு உறுதுணையாக இருந்து வருகிறது.
எனவே, உங்களது வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றால் அது உங்கள் கையில் தான் உள்ளது என்பதை மனதில் வைத்து, உயர்கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்த பணியில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். மற்ற குழந்தைகளுக்கு நீங்கள் முன்மாதிரியாக இருப்பதோடு, குழந்தை தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களையும் உயர்கல்வி கற்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த், குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் ஆதிநாராயணன், திட்ட மேலாளர் செல்வம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கிறிஸ்டி, லைலாம்பிகா, குழந்தைகள் பாதுகாப்பு உதவி இயக்குனர் சுடலைசெல்வம் மற்றும் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கம், நெல்லை கோர்ட்டு வளாகத்தில் தொடங்கியது. மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.
பாளையங்கோட்டை மார்க்கெட், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசார வாகனத்தில் சென்று, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகள் குறித்த கையேடுகளும் பொதுமக்களுக்கு வழங்கினர். நீதிபதிகள் அருள் முருகன், ஜெயராஜ், சந்திரா, ஹேமானந்த குமார், கங்கராஜன், தனஞ்செயன், வக்கீல்கள் சங்க தலைவர் சிவசூரிய நாராயணன், குழந்தை தொழிலாளர் நல அலுவலர் சந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தொழிலாளர் நலத்துறையின் சார்பில், பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். செய்யும் தொழிலே தெய்வம், அதை குழந்தைகள் செய்தால் பாவம், குழந்தைகளின் வருமானம், பெற்றோருக்கு அவமானம், புத்தகம் ஏந்தும் கைகள், பத்து பாத்திரம் ஏந்தலாமா?, குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதை கண்டால் 1098 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்,
“குழந்தை தொழிலாளர்களையோ, வளரும் இளம் பருவத்தினரையோ எவ்வகையான தொழிலிலும் ஈடுபடுத்தினால், அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ-மாணவிகள் கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலமானது புதிய பஸ் நிலையம் சென்று மீண்டும் ஊர்வலம் தொடங்கிய இடத்திற்கு வந்து முடிவடைந்தது. இதில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், தொழிலாளர் உதவி ஆணையர் முகமது யூசுப், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி அருள்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை:
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி, குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் நாள் “குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்” அனுசரிக்கப்படுகிறது.
குதூகலமாய் துள்ளித் திரிந்து, பள்ளி சென்று கல்வி பயின்று, அளவில்லா இன்பத்தை அள்ளிப் பருக வேண்டிய பள்ளிப் பருவத்தில், குழந்தைகளை பணிக்கு அனுப்புவது மிகக் கொடிய செயல் ஆகும். ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது குழந்தைகளே! எனவே, அறிவும், வலிமையும் பொருந்திய தலைமுறையை உருவாக்கிட, குழந்தைகளுக்கு உரிய கல்வி அளிப்பதோடு, அவர்களின் நலனைப் பேணுவதும் நமது தலையாய கடமையாகும்.
குழந்தைத் தொழிலாளர் முறையினை தமிழ் நாட்டிலிருந்து முற்றிலுமாக அகற்றிடும் உயரிய நோக்கில், அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்து அவர்களை சிறப்புப் பயிற்சி மையங்கள் மற்றும் முறையான பள்ளிகளில் சேர்த்து, அவர்களுக்கு விலையில்லா சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், காலணிகள், மிதிவண்டிகள், மடிக்கணினிகள், கல்வி உபகரணங்கள், சத்தான மதிய உணவு, கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் ஆகியவற்றை வழங்குதல், உயர்கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர்களுக்கு அவர்களின் கல்விக் காலம் முழுமைக்கும் ரூ.500 மாதாந்திர உதவித் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி, குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தப்படுவதை தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட சட்டத் திருத்தத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
“குழந்தைகள் உழைப்பு நாட்டிற்கு சிறுமை” என்பதை உணர்ந்து, அனைத்து பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, அவர்களுக்கு அழிவில்லாத கல்விச் செல்வம் கிடைக்கச் செய்ய வேண்டும். “தொழிலாளர்களாக இல்லாமல், குழந்தைகளை குழந்தைகளாகவே வளர்ப்போம்” என்ற உறுதியினையும், “குழந்தை தொழிலாளர் இல்லா உலகை உருவாக்குவோம்” என்ற உறுதியினையும், அனைவரும் ஏற்று, குழந்தைத் தொழிலாளர் இல்லா மாநிலமாக தமிழ் நாட்டை உருவாக்கிட அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் சீரிய முயற்சிகளுக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #CMEdappadiPalaniswami #childlabour
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்